Loading...
 

பலனளிக்கும் மதிப்பீடுகள்

 

 

பலனளிக்கும் மதிப்பீடுகள்

அலெக்சாண்டர் ஹ்ரிஸ்டோவ்

 

நீங்கள் அநேகம் பார்த்திருப்பீர்கள், பல பாத்திரங்கள் மற்றவர்களை மதிப்பீடு செய்வதுடன் தொடர்புடையதாக இருக்கும். "மதிப்பீடு" என்பது "ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்குவது" என்பதாகும், மேலும் இத்தகைய ஆக்கப்பூர்வமான கருத்துக்களானது மதிப்பீடு செய்யப்படுபவர் குறிப்பிட்ட வழிகளில் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்வது முக்கியம். மதிப்பீடு என்பது மற்றவர்களை நிர்ணயம் செய்வதோ அல்லது விமர்சிப்பதோ அல்ல.

சொற்பொழிவு மதிப்பீட்டாளர் வகிக்கும் பாத்திரமானது Agora -வில் மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்றாகும். உங்கள் சக உறுப்பினருக்கு தேவையான ஆழமான புரிதலை நீங்கள் வழங்கி, அவர் கல்வி பாதையில் முன்னேறிச் செல்வதற்கு நீங்கள் உதவிப் புரிவீர்கள்.

சொற்பொழிவு மதிப்பீட்டாளராவதற்கு அனைவருக்கும் தகுதி உள்ளது.

 


போஸ்கோ மோன்டெரோ, Agora Speakers மாட்ரிட் சந்திப்பில் சொற்பொழிவு ஒன்றை மதிப்பீடு செய்கிறார்
போஸ்கோ மோன்டெரோ, Agora Speakers மாட்ரிட் சந்திப்பில் சொற்பொழிவு ஒன்றை மதிப்பீடு செய்கிறார்

"சொற்பொழிவை மதிப்பீடு செய்யும் அளவுக்கு எனக்குப் போதுமான அனுபவம் இருக்கிறதா?" அல்லது "நான் ஒரு சில செயல்திட்டங்களை மட்டுமே கையாண்டுள்ளேன், மேம்பட்ட செயல்திட்டம் ஒன்றுக்குச் சொற்பொழிவு மதிப்பீட்டாளராக இருப்பதற்கு நான் தகுதி பெற்றிருக்கிறேனா?", என்கிற கேள்வியைச் சொற்பொழிவு மதிப்பீட்டாளர்கள் வழக்கமாகக் கேட்பதுண்டு.

 

வழக்கமாக, இதன் உள்ளர்த்தம் என்னவென்றால், நீங்கள் போதுமான அளவு சொற்பொழிவாற்றியதில்லை என்பதால், நீங்கள் மற்றவருடைய சொற்பொழிவை மதிப்பீடு செய்வதற்கான அறிவோ அனுபவமோ உங்களுக்கு இல்லை என்பதாகும்.

எவ்வாறாயினும், இது ஒரு தவறான தர்க்கமாகும். கடைசியாக உங்கள் நண்பர் ஒருவருடன் திரைப்படம் பார்க்க சென்றதை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிய பிறகு அந்தப் படம் அல்லது நடிப்பு குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்து இருந்ததா? படம் பார்த்து முடித்ததும் உங்கள் நண்பரிடம், "அற்புதம், படம் செம்மையா இருந்ததுல. ...... காட்சி எனக்கு ரொம்பப் பிடிச்சது." அல்லது "குமார், படம் கொடுமையா இருந்ததுல. நடிப்பு ரொம்ப மோசமாக இருந்துச்சு." என்பன போன்ற கருத்துக்களைத்தான் முதன் முதலில் கூறுவீர்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். இருப்பினும் நீங்கள் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு, தொழில் ரீதியான திரைப்படத் தயாரிப்பாளரோ அல்லது திரைக்கதை எழுத்தாளரோ அல்லது நடிகரோ அல்ல.

இதைப்போன்ற நிகழ்வுதான் நம் வாழ்வில் நடக்கும் பல விஷயங்களுக்கும் பொருத்தும் - உதாரணமாக, நாம் உணவகத்திற்குச் செல்வோம்; சமைலறையை ஒரு வழி பண்ணாமல் எளிமையான வறுத்த முட்டையைக் கூடச் செய்யத் தெரியாது என்றாலும், உணவகத்தில் சுவைத்த உணவுகளைப் பற்றிக் கருத்து தெரிவிப்போம். அதே போலத் திரையரங்கிற்குச் செல்வோம்; நாடகப் பள்ளியை நிறைவு செய்யாவிட்டாலும் கூட, கதையையும், நடிப்பையும் பற்றிக் கருத்து தெரிவிப்போம். கால்பந்து விளையாட்டைப் பார்க்கச் செல்வோம்; இதுவரை ஒரு விளையாட்டு கூட விளையாடியதில்லை என்றாலும், ஒவ்வொரு விளையாட்டு வீரரும் விளையாடியதை பற்றிக் கருத்து தெரிவிப்போம்.

இவற்றையெல்லாம், நாம் தொழில் ரீதியான பார்வையில் இருந்து மதிப்பீடு செய்யவில்லை (கருத்து தெரிவிக்கவில்லை).

சொற்பொழிவு மதிப்பீட்டின் குறிக்கோள் ஆனது கல்வி அல்லது தொழில்முறை ரீதியான வரையறைகளின் கண்ணோட்டத்தில் பேச்சாளரை மதிப்பீடு செய்வதல்ல.

சொற்பொழிவு மதிப்பீட்டின் குறிக்கோளானது அவை உறுப்பினரின் பார்வையில் இருந்து பேச்சாளர் மற்றும் சொற்பொழிவு குறித்த உங்கள் கருத்தை தெரிவிப்பதாகும்.

அவை உறுப்பினர்களில் ஒருவராக, நீங்கள் பார்த்ததையும் கேட்டதையும் அறிவீர்கள், அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு உங்களை எப்படி உணர வைத்தது என்பதையும் அறிவீர்கள். சாத்தியமான எல்லாத் தலைப்புகள் பற்றியுமான சொற்பொழிவுகளைக் கேட்கும் முழு வாழ்நாள் அனுபவமும் உங்களுக்கு இருக்கிறது.

ஒரு மதிப்பீட்டாளராக, நீங்கள் உங்கள் சொந்த கருத்தை மட்டுமே தெரிவிக்கிறீர்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மதிப்பீட்டாளராக உங்களது இலக்குகள்

ஒரு சொற்பொழிவு மதிப்பீட்டாளராக உங்களுக்கு மூன்று முக்கிய இலக்குகள் உள்ளன:

  • பேச்சாளரை ஊக்குவிப்பது: எல்லாப் பேச்சாளர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் அதே ஐயரவுகள் இருக்கின்றன, எல்லோரையும் போலவே அவர்கள் உடையதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்று எண்ணுகிறார்கள். ஒரு பேச்சாளர் சிறப்பாகச் சொற்பொழிவாற்றுபவராக இருந்தாலும், தன்னம்பிக்கையோடு பேசினாலும், "நான் சரியாகப் பேசினேனா?", "நான் பேசியது நம்பி, ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்திருக்குமா?", "இந்த மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?", "என்னுடைய சொற்பொழிவில் இந்தந்த பிழைகள் இருந்தது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்களா?", என்பது போன்ற அதே சந்தேகங்களும் அச்சங்களும் அவருக்குள்ளும் இருக்கும். இந்த அச்சங்கள் வரும்போது அனுபவம் வாய்ந்த பேச்சாளருக்கும் புதியவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் அதனை எவ்வாறு கட்டுப்படுத்தி, கையாளுகிறார்கள் என்பதுதான். எனவே அனைத்து பேச்சாளர்களும் தங்களது ஆக்கப்பூர்வமான விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு அங்கீகரிக்கப்படுவதையும் ஊக்குவிப்பதையும் பெரும் மதிப்பாகக் கருதுவார்கள்.
  • பேச்சாளருக்கும் பார்வையாளர்களுக்கும் (அவையோருக்கும்) எடுத்துரைப்பது: ஒரு மதிப்பீட்டாளராக, நீங்கள் என்னென்ன விஷயங்களை மேம்படுத்தலாம், ஏன் இந்த விஷயங்கள் முக்கியம் என்பதை நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும். "நான் இன்னும் கொஞ்சம் குரலை வேறுபடுத்திப் பேசுவேன்" என்று மட்டும் சொல்லாதீர்கள். பொதுவாகவும் அந்தக் குறிப்பிட்ட செயல்திட்டத்திற்கும் குரலை வேறுபடுத்திப் பேசுவது ஏன் முக்கியமானது என்பதை விளக்கமாகக் கூறுங்கள். விளக்கம் பேச்சாளருக்கானதுதான, ஆனால் இதன் மூலம் பார்வையாளர்களும் தெரிந்துக் கொள்வார்கள், ஏனெனில் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிப்பதன் மூலமும் நாம் பெரும்பாலும் விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம்.
  • பேச்சாளர் தன்னை மேம்படுத்திக் கொள்ள உதவுவது: எல்லா பேச்சாளர்களும், ஏன் அனுபவம் வாய்ந்த பேச்சாளர்கள் கூட, தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் கிளப் சந்திப்புகளில் பங்கேற்கிறார்கள். இல்லையெனில், அவர்கள் ஒரு கிளப்பில் கலந்துகொள்வதற்குப் பதிலாக மாநாடுகளில் சொற்பொழிவாற்றி அதற்காக கட்டணம் பெறுவார்கள்! ஒரு பேச்சாளர் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் வகையில், நீங்கள் அவருக்கு செயல்படுத்தக்கூடிய  குறிப்பிட்ட ஆலோசனையை வழங்க வேண்டும். உங்கள் கருத்தின் அடிப்படையில் - அவரது பேச்சு திறனை மேம்படுத்த அவர் சிறப்பாகவோ அல்லது வித்தியாசமாகவோ செய்யக்கூடிய விஷயங்கள் என்னென்ன என்பதை அவருக்கு தெரிவிக்க வேண்டும்.

 

ஒரு மதிப்பீட்டாளராகச் செய்ய வேண்டிய விஷயங்கள் - சந்திப்பிற்கு முன்பு

ஒரு மதிப்பீட்டாளராகத் திறன் மிக்க வகையில் செயல்படுவதற்கு, செயல்திட்டத்தைப் பற்றியும், யார் சொற்பொழிவாற்ற இருக்கிறார்கள் என்பதை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சந்திப்பில் மதிப்பீட்டாளர் பாத்திரம் வகிப்பதற்கு "தன்னார்வத்தின் பேரில்" நீங்களே ஒப்புக்கொண்டாலும், சந்திப்பிற்கு முன்பு குறைந்தபட்சம் பின்வரும் பணிகளைச் செய்வதற்குச் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.

 

1. செயல்திட்டம் குறித்து வாசிப்பது

பேச்சாளர் வழங்கவிருக்கும் செயல்திட்ட விளக்கத்தை முழுமையாக வாசியுங்கள். கற்றல் குறிக்கோள்கள் மற்றும் முக்கிய நோக்கங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துங்கள். செயல்திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பேச்சாளருக்கு தெரிவிப்பது இவைதான்.

 

2. சந்தர்ப்பச் சூழலை தீர்மானிப்பது

அனைத்து மதிப்பீடுகளும் சந்திப்பு நிகழும் குறிப்பிட்ட சந்தர்ப்பச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும். சந்தர்ப்பச் சூழலில் இடம்பெறும் ஆக்கக் கூறுகள்:

  • செயல்திட்ட நோக்கங்கள்
  • பேச்சாளர் பின்பற்றும் கல்வி வரிசை அமைப்பின் ஒட்டுமொத்த குறிக்கோள்கள்
  • பேச்சாளரின் நிலை
  • பேச்சாளரின் குறிப்பிட்ட ஆர்வங்கள்
  • இடம் அல்லது வளாகம்
  • நேரம்
  • முந்தைய மற்றும் பின்வரும் நிகழ்ச்சிகள்.

சந்தர்ப்பச் சூழல் ஒரு நல்ல மதிப்பீட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக ஒரு பேச்சாளரின் நிலையைக் கருத்தில் எடுத்துக் கொள்ளலாம். யாரேனும் ஒருவர் பொதுச் சொற்பொழிவை தொடங்கும்போது, பார்வையாளர்களை நேருக்கு நேர் பார்ப்பது போன்ற அடிப்படைக் கூறுகளின் கருத்து விரிவாக விளக்கப்படலாம். "நீங்கள் சொற்பொழிவாற்றும்போது, இடது பக்கம் உள்ள பார்வையாளர்களை நீங்கள் அதிகம் பார்க்கவில்லை. அனைத்து உறுப்பினர்களையும் நேருக்கு பார்ப்பது பல காரணங்களுக்காக முக்கியமான விஷயமாக இருக்கிறது - நீங்கள் பார்க்கும் நபரின் கவனத்தை இச்செயல் உடனடியாக ஈர்க்கிறது, நீங்கள் தன்னம்பிக்கை உணர்வை அவர்களுக்கு கடத்துகிறீர்கள், நீங்கள் அந்த நபருடன் நேருக்கு நேர் நட்பாக உரையாடுகிற ஒரு சந்தர்ப்பச் சூழலை உருவாக்குகிறீர்கள்", என்பன போன்ற விஷயங்களை விரிவாக எடுத்துக் கூறலாம்.

நீங்கள் இவ்வாறு விவரமாக விளக்குகிற பேச்சாளர் 20 செயல்திட்டங்கள் குறித்துச் சொற்பொழிவாற்றிய அனுபவமிக்கப் பேச்சாளராக இருந்தால், நீங்கள் மேற்கூறிய விஷயங்கள் தேவையில்லாததாகவும், நேரத்தை வீணடிக்கக்கூடியதாகவும் அமையும். எனவே இதற்குப் பதிலாகப் பேச்சாளர் அவ்வளவு அறிந்திராத விஷயங்களை எடுத்துக் கூறி இந்நேரத்தை சிறப்பாகச் செலவிடலாம். அதற்காக நீங்கள் இதைத் தெரிவிக்கக் கூடாது என்று அர்த்தமல்ல என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லாப் பேச்சாளர்களும் - ஏன் அனுபவம் வாய்ந்த பேச்சாளர்கள் கூட - எப்போதாவது அடிப்படை பிழைகளைச் செய்வார்கள். எனவே, இத்தகைய சூழலில் "உங்கள் சொற்பொழிவின்போது, நீங்கள் இடது பக்க பார்வையாளர்களை அவ்வளவாகப் பார்க்கவில்லை" என உங்கள் கருத்தை சுருக்கமாகக் கூறலாம், அந்த விஷயத்திலேயே மூழ்கி விடக்கூடாது - ஏனெனில், அனுபவம் வாய்ந்த பேச்சாளருக்கு இவ்விஷயம் ஏற்கனவே தெரியும்.

மேலும், அனுபவம் வாய்ந்த பேச்சாளர்கள் பொதுவாகத் தன்னை இன்னும் மேம்ப்படுத்திக் கொள்வதற்குக் கூடுதல் பரிந்துரைகளைப் பெற விரும்புவார்கள், அதே நேரத்தில் புதிய பேச்சாளர்களுக்கு அதிக ஊக்கமும், உற்சாகமும் தேவை, எனவே இவர்களிடம் ஒரு தடவைக்கு சில உதவிக்குறிப்புகள் கூறுவது போதுமானது.

சந்திப்பு நடைபெறும் இடம் அல்லது வளாகமும் ஒரு முக்கியமான சதர்ப்பச் சூழல். வளாகம் ஒழுங்கில்லாதபோதும் சிறந்த பேச்சாளர்கள் அதற்கேற்றவாறு மாறிக் கொள்ள வேண்டும்:

  • வடிவமைப்பு - சில நேரங்களில், வளாகமானது மோசமான அமைப்பைக் கொண்டிருக்கும், எனவே பார்வையாளர்கள் ஒரே இடத்தில் கூடியிருக்க மாட்டார்கள், பல்வேறு வடிவங்களில் ஆங்காங்கே அமர்ந்திருப்பார்கள். இத்தகைய சூழலில் சிறந்த பேச்சாளர்கள் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல் அவர்கள் அனைவரையும் பார்த்தவாறு சொற்பொழிவாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஒலியமைப்பு - சில வளாகங்களானது மோசமான ஒலியமைப்பைக் கொண்டிருக்கும், இத்தகைய சூழலில் சிறந்த பேச்சாளர் குரலை உயர்த்தி உரக்க பேசுவதன் மூலம் இதனை சரிசெய்ய வேண்டும்.
  • வெளிச்சம் - சில நேரங்களில், விளக்குகள் மிகவும் மங்கலாக இருக்கும், இத்தகைய சூழலில் பார்வையாளர்கள் கவனிக்காமல் இருப்பதைத் தவிர்ப்பதற்குப் பேச்சாளர் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சில நேரங்களில் விளக்குகள் மிகவும் பிரகாசமாக இருக்கும், இத்தகைய சூழலில் பேச்சாளர் காட்சி உபகரணங்கள் அல்லது புரஜெக்ஷன் கருவிகளைப் பயன்படுத்தினால் அது இன்னும் சிக்கலாக அமையும்.
  • வெப்பநிலை - சந்திப்பு நடைபெறும் வளாகத்தில் பொருத்தமான வெப்பநிலை, ஈரப்பதம் அல்லது காற்றோட்டம் இல்லையென்றால், பார்வையாளர்கள் அவர்களுக்கு நேருகிற அசௌகரியத்தின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள், இத்தகைய சூழலில் அவர்களின் கவனம் சிதறாமல் இருப்பதற்கு சிறந்த பேச்சாளர் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். இத்தகைய சமயங்களில், ஒரு நல்ல பேச்சாளர் நிகழும் அசௌகரியங்களுக்கு பொருத்தமான (பொதுவாக நகைச்சுவையான) குறிப்பை உள்ளடக்கி பேசும்போது, அவரால் பார்வையாளர்களின் கவனத்தை கிட்டத்தட்ட எவ்வித முயற்சியும் இல்லாமல் உடனடியாக பெறலாம்.

சொற்பொழிவாற்றுகையில், நாளின் பொழுதும் இன்றியமையாத காரணிகளாக இருக்கின்றன, இருப்பினும், கிளப் அமைப்புகளில், இது கிட்டத்தட்ட நிலையானதாகவே இருக்கும். ஏனெனில், பெரும்பாலான கிளப்புகளில் வாரத்தின் ஒரே நாளில் ஒரே நேரத்தில்தான் சந்திப்புகள் நடைபெறும். கிளப்பிற்கு வெளியே நடக்கும் செயல்திட்ட சந்திப்புகளுக்கும் பொதுவாக நிஜ உலகத்தில் நடைபெறும் சந்திப்புகளுக்கும், திங்கட்கிழமை அதிகாலையில் நிகழ்த்தப்படும் சொற்பொழிவும், வேலை நாள் கிட்டத்தட்ட முடிவடையும் நேரத்திற்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை அன்று நிகழ்த்தப்படும் சொற்பொழிவும் சமமானதல்ல, ஏனெனில் சொற்பொழிவு நிகழ்த்தப்படும் இந்நேரத்தில் மக்களின் எண்ணங்களும் மனசும் ஏற்கனவே வளாகத்தை விட்டு வெளியே சென்றிருக்கும், வரவிருக்கும் வார விடுமுறையையொட்டி. அதே போலக் காலை 8:00 மணிக்கு நிகழ்த்தப்படும் சொற்பொழிவும் மதிய உணவுக்கு முன் அல்லது பின் உடனடியாக நிகழ்த்தப்படும் சொற்பொழிவும் சமமாக இருக்காது. 

 

3. பேச்சாளரை தொடர்புக் கொள்வது

ஒரு மதிப்பீட்டாளராக உங்கள் பணியானது சந்திப்பிற்கு முன்பாகவே தொடங்கிவிடும். பல பேச்சாளர்கள் ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் சொந்தமாக தனக்கென்று கூடுதல் இலக்குகளைக் கொண்டிருப்பர். பல பேச்சாளர்கள் முந்தைய செயல்திட்டங்களில் தாங்கள் கற்றுக் கொண்ட குறிப்பிட்ட விஷயங்களை, நடைமுறைப்படுத்த வேண்டுமென்று விரும்புவார்கள். அவர்கள் அதை எவ்வாறு சிறப்பாக செய்தார்கள் (அல்லது செய்யவில்லை) என்பதை யாராவது சுட்டிக்காட்டுவது நன்மை பயக்கக்கூடியதாக அமையும். உதாரணமாக, பேச்சாளருக்கு இடது பக்க பார்வையாளர்களை அதிகம் பார்க்கக்கூடிய பழக்கம் இருக்கலாம் அல்லது பேச்சாளர் சொற்பொழிவாற்றும் முழு நேரமும் முன்னும் பின்னும் நகரும் பழக்கம் இருக்கலாம் அல்லது பேச்சாளர் தனது சொற்பொழிவு தெளிவாக இருக்கிறதா அல்லது அறையின் பின்புறம் வரை கேட்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பலாம்.

இத்தகைய காரணங்களுக்காக, சந்திப்பிற்கு முன்பு பேச்சாளரை சந்தித்து, செயல்திட்ட இலக்குகளுக்கு கூடுதலாக, வேறு ஏதேனும் விஷயங்களை நான் சிறப்பாக கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா என்று அவரிடம் கேளுங்கள்.

 

4. உங்கள் மதிப்பீட்டை முன்கூட்டியே குறிப்பெழுதுவது

நீங்கள் இன்னும் சொற்பொழிவை கேட்கவில்லை என்றாலும், சந்திப்பிற்கு முன்பாகவே நீங்கள் எந்தத் திட்ட முறையில் மதிப்பீடு செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து, அதன் பொது அமைப்பை முன்கூட்டியே எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பேச்சாளரின் துவக்க சொற்பொழிவை நீங்கள் எவ்வாறு நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதை ஆக்கப்பூர்வமான கருத்துடன் ஆரம்பிக்க வேண்டும் என்று நீங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கலாம் அல்லது அந்தக் குறிப்பிட்ட செயல்திட்டம் குறித்த உங்கள் தனிப்பட்ட அனுபவத்துடன் தொடங்க முடிவு செய்யலாம். ஒரு சக உறுப்பினர் தனது ஒவ்வொரு மதிப்பீடுகளின் ஒவ்வொரு வரியையும் "உங்கள் பேச்சு எனக்கு நினைவூட்டியது ...." என்றே தொடங்குவார், அதற்குப் பிறகு தனது சொந்த அனுபவத்தைச் சுருக்கமாகக் கூறி தொடருவார்.

ஒரு குறிப்பிட்ட செயல்திட்டத்திற்கு பொருந்தக்கூடிய சில மேற்கோள்களையும் நீங்கள் சுட்டிக்காட்டுவதற்கு தேர்வு செய்யலாம். உதாரணமாக, "சொற்பொழிவாற்றும் திறன் மேம்பாடு," செயல்திட்டத்தை எடுத்துக் கொள்வோம், சொற்பொழிவு உரையை எழுதும்போது நடைமுறைக்கேற்ற மொழிகளை பயன்படுத்துவதே இச்செயல்திட்டத்தின் முக்கிய அம்சமாகும், எனவே இதில் அன்டோயின் டி செயிண்ட்-எக்ஸ்புரியின் பின்வரும் மேற்கோளை சேர்க்க விரும்புகிறேன்:

"நீங்கள் ஒரு கப்பலை உருவாக்க விரும்பினால், மரக்கட்டைகளைச் சேகரிக்க வேண்டுமென்று மக்களைத் தூண்டாதீர்கள், அவர்களுக்குப் பணிகளையும் வேலைகளையும் கொடுக்காதீர்கள், மாறாகக் கடலின் முடிவற்ற அபரிமிதத்தை அனுபவிக்க ஆசைப்படுவதற்கு அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்."

இந்த மேற்கோள் பார்வையாளர்களுக்கு சக்திவாய்ந்த காட்சிகளையும் உணர்வுகளையும் கடத்தும் மொழியைப் பயன்படுத்துவதன் அவசியத்தை விளக்க உதவுகிறது.

மதிப்பீடும் ஒரு வகையான சொற்பொழிவே என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் அமைப்பு, தெரியப்படுத்த விரும்பும் செய்தி, தெளிவு, வேகக்கட்டுப்பாடு என ஒரு நல்ல சொற்பொழிவில் இருக்கும் அனைத்து பண்புகளும் இதில் இடம்பெற வேண்டும்.

நீங்கள் கவனம் செலுத்த விரும்பும் முக்கிய விஷயங்களையும் நீங்கள் முன்கூட்டியே எழுதி வைத்துக் கொள்ளலாம், மேலும் சில முக்கிய வார்த்தைகளைகளையும் நீங்கள் முன்கூட்டியே எழுதி வைத்துக் கொள்ளலாம், பின்பு பேச்சாளர் எப்படிச் சொற்பொழிவாற்றினார் என்பதைப் பொறுத்து அதை அடிக்கோடிடலாம் அல்லது கிராஸ் செய்யலாம் (சிலர் "பிளஸ்" மற்றும் "மைனஸ்" அறிகுறிகளைப் பயன்படுத்த விரும்புவார்கள்). சொற்பொழிவின்போதே உங்களது கருத்தை பதிவு செய்து கொள்வது என உங்கள் நேரத்தை சேமிக்கும் எதனையும் நீங்கள் செய்யலாம், இதன் மூலம் சொற்பொழிவின் மீது கவனம் செலுத்துவதற்கு அதிக நேரம் கிடைக்கும்.

 

ஒரு மதிப்பீட்டாளராகச் செய்ய வேண்டிய விஷயங்கள்  -  சந்திப்பின் போது

 

உட்கார வேண்டிய இடம்.

நீங்கள் நடுநிலையான, எவ்வித சலுகையும் இல்லாத இடத்தில் அமர வேண்டும். பேச்சாளரை நேரடியாக "பார்க்கவும்" அவர் பேசுவதைத் தெளிவாக "கேட்கவும்" முன் வரிசையில் உட்கார வேண்டும் என்று எண்ணாதீர்கள், ஏனென்றால் பார்வையாளர்கள் பொதுவாக அவ்வாறு உணர மாட்டார்கள். ஒரு மதிப்பீட்டாளராக, நீங்கள் ஒரு அதிகாரப்பூர்வமான நடுவர் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் பார்வையாளர்களில் ஒருவராக இருந்து, குறுகிய மதிப்பீட்டு உரையில் தனது கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.

 

கவனமாக கேட்க வேண்டும்

ஒரு சொற்பொழிவை மதிப்பீடு செய்ய, நீங்கள் அதைக் கேட்க வேண்டும், அதுவும் கவனமாகக் கேட்க வேண்டும். தற்போது, நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களை நீங்கள் முன்கூட்டியே எழுதி வைத்துவிட்டீர்கள், எனவே நீங்கள் எழுதுவதற்கு நேரத்தை செலவிடத் தேவையில்லை. உங்கள் பானம், உங்கள் உணவு, உங்கள் மொபைல், பார்வையாளர்களாக உங்கள் அருகில் அமர்ந்திருப்பவர்கள் அல்லது நீங்கள் விரும்பும் உறுப்பினர் போன்றவற்றை மறந்து விடுங்கள் ... எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள்.

 

குறிப்பெழுத வேண்டும்

உங்கள் ஞாபகத்திறன் எவ்வளவு அற்புதமானது என்று நீங்கள் நினைப்பதெல்லாம் இதில் வேலைக்கு ஆகாது. ஒரு சொற்பொழிவைப் பற்றி இதைச் சொல்ல வேண்டும் அல்லது அதைச் சொல்ல வேண்டும் என்பதெல்லாம் உங்கள் நினைவில் இருக்கும் என்று நினைத்து உங்களை ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் - அதற்குப் பதிலாக எழுதி வைத்து விடுங்கள். குறிப்பாக, அந்தந்த விஷயங்களை நீங்கள் கவனிக்கும்போது குறிப்பெழுதி விடுங்கள்:

  • குறிப்பாக நல்லவை அல்லது நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியவை என்று நீங்கள் எண்ணுகிற குறிப்பிட்ட நல்ல மேற்கோள்கள் அல்லது வாக்கியங்கள்
  • முக்கியச் செய்தியை தெரிவிப்பதற்கு உதவியாக இருக்கும் மிகவும் பொருத்தமான ஏதேனும் சைகைகள் அல்லது உடல் அசைவுகள் (அல்லது, மாறாக, தடுமாற்றமான, மிகைப்படுத்தப்பட்ட அல்லது முக்கியமல்லாத விஷயங்கள் என்று நீங்கள் கருதியது)
  • திறன்மிக்க வகையில் பயன்படுத்தாத அல்லது முற்றிலும் பயன்படுத்தாத ஏதேனும் காட்சி உபகரணங்கள் அல்லது கருவிகள்.
  • பொதுவாக, முழுச் சொற்பொழிவிலும் மிகவும் அருமையாக இருந்தது என்று நீங்கள் நினைத்த ஏதேனும் விஷயங்கள் (அல்லது அதற்கு எதிர்மாறான விஷயங்கள்).

 

நீங்கள் குறிப்பெழுதுகையில், அவற்றை மீண்டும் உங்களால் படிக்க இயலும் வகையில் எழுதுவதை உறுதிசெய்க! ஒன்றிரண்டு மதிப்பீட்டாளர்கள் தங்கள் சொந்த கையெழுத்தையே படிக்க இயலாமல் மேடையில் அவதிப்பட்டுள்ளனர்.

பெரிய எழுத்துக்களில் குறிப்பெழுதுவது என்பதும் ஒரு நல்ல பரிந்துரை. இதன் மூலம் நீங்கள் எளிதாகப் படிக்கலாம், மேலும் அந்தக் குறிப்புகளைக் கையில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. நீங்கள் அவற்றை விரிவுரை வழங்கும் மேசையிலோ அல்லது முதல் வரிசையில் உள்ள நாற்காலியிலோ வைத்தவாறே தூரத்திலிருந்து வாசிக்கலாம்.

நீங்கள் குறிப்புகள் எழுதும்போது, நீங்கள் எழுதிய ஒவ்வொரு விஷயத்தின் முக்கியத்துவம் குறித்தும் தீர்மானியுங்கள். உங்கள் மதிப்பீட்டு உரையின் போது, நீங்கள் சொல்ல விரும்பும் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்ல உங்களுக்கு நேரம் இருக்காது. எனவே நீங்கள் கவனித்த ஒவ்வொரு விஷயத்திற்கும் அதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும் எண்ணை நியமிப்பது ஒரு நல்ல யுக்தியாகும் (சிலர் "+", "++" மற்றும் "+++" போன்றவற்றைப் பயன்படுத்த விரும்புகிறார்கள், மேலும் முன்னேற்றம் குறித்த விஷயங்களுக்கு அதேபோல "-" என்ற குறியீட்டை பயன்படுத்த விரும்புகிறார்கள்), பின்பு சொற்பொழிவின் நிறைவின்போது நீங்கள் சொல்ல விரும்பும் விஷயங்களின் சுருக்கத்தையும் விரைவாக எழுதுங்கள்.

 

நீங்கள் கவனிக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுங்கள்

பேச்சாளர்கள் இவ்வாறு செய்யக் கூடாது என்றாலும், அவர்கள் மற்ற பார்வையாளர்களைக் காட்டிலும் மதிப்பீட்டாளர்கள் மீதே அதிகக் கவனம் செலுத்துவார்கள். ஒரு கட்டம் வரை, அது இயல்பாக இருக்கும், அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அது உங்கள் மீது கூடுதல் பொறுப்பைச் சுமத்துகிறது. பேச்சாளரை அதிகம் பார்ப்பது, தலையாட்டுவது போன்ற சிறிய ஒப்புதல் சைகைகளைச் செய்வது, ஆதரவாக இருப்பது முக்கியமானதாக இருக்கும் சூழலில் - எடுத்துக்காட்டாக, பேச்சாளர் ஒரு நகைச்சுவையையோ அல்லது வேடிக்கையான கதையையோ கூறும்போது, உறுதுணையாக இருந்து அதற்கான சைகைகளை வெளிப்படுத்துவது என அவர்கள் சொற்பொழிவாற்றுவதை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்ட வேண்டும்.

மதிப்பீட்டில் இடம் பெறாத விஷயங்கள்

சொற்பொழிவைக் கேட்கும்போது, மதிப்பீடு செய்யப்பட்ட விஷயங்களை மட்டுமல்ல, மதிப்பீடு செய்யாத விஷயங்களையும் நினைவில் கொள்வது எப்போதும் நல்லது:

  • சொற்பொழிவாற்றும் விஷயங்கள் குறித்த தேர்வு பொதுவாக மதிப்பீடு செய்யப்படுவதில்லை, செயல்திட்டத்தின் குறிக்கோள்களை அடைவதற்கு இது எவ்வாறு தொடர்புடையது என்று சொல்வதைத் தவிர. உதாரணமாக, ஒரு செயல்திட்டம் உடல் பாவனையைப் பற்றி இருக்கிறது என்றால், பேசிய விஷயத்தின் தேர்வு இதற்கு நிறைய வாய்ப்புகளை அளித்ததா இல்லையா என்பது குறித்து நீங்கள் கருத்துத் தெரிவிக்கலாம். தவிர, பேச்சாளர்கள் தாங்கள் பேச விரும்பும் விஷயத்தைச் சுதந்திரமாகத் தேர்வு செய்யலாம்.

 

  • சில குறிப்பிட்ட செயல்திட்டங்களைத் தவிர உள்ளடக்கம் (சொற்பொழிவாற்றிய விஷயங்கள்) பொதுவாக மதிப்பீடு செய்யப்படுவதில்லை. நீங்கள் சொற்பொழிவாற்றிய விஷயங்களுடன் உடன்படவில்லை என்றாலும், அது குறித்த கருத்துத் தெரிவிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள், அல்லது யார் சொல்வது சரி அல்லது தவறு என்று பேச்சாளருடன் அதிகம் வாதாடாதீர்கள் அல்லது விவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

 

  • நபர் குறித்த ஒருபோதும் மதிப்பீடு செய்யப்படுவதில்லை. அவரது உடைகள், அல்லது அவரது ஸ்டைல், அல்லது அவரது ஆபரணங்களின் தேர்வு குறித்து நீங்கள் கருத்துத் தெரிவிக்கக்கூடாது, அவை பேச்சை மிகவும் குறிப்பிட்ட வழியில் பாதித்திருந்தால் தவிர. உதாரணமாக, பேச்சாளர் ஒவ்வொரு முறை கை அசைக்கும்போதும் கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் சத்தம் எழுப்புகிற வளையல்களை அவர் அணிந்திருந்தால், அதைச் சுட்டிக்காட்ட வேண்டும். இருப்பினும், "இன்று நீங்கள் மிகவும் அழகான ஆடை அணிந்திருந்தீர்கள்" அல்லது "இன்று நீங்கள் அணிந்திருந்த சூட் எவ்வளவு நன்றாக இருந்தது தெரியுமா!" என்பது போன்ற கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை.

 

ஒரு மதிப்பீட்டாளராகச் செய்ய வேண்டிய விஷயங்கள் - மதிப்பீட்டு சொற்பொழிவை வழங்குவது

வழக்கமாக, மதிப்பீட்டு சொற்பொழிவை வழங்குவதற்கான பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறை "சாண்ட்விச்" அணுகுமுறை என்று அழைக்கப்படுகிறது, இது ஆக்கப்பூர்வமான கருத்து மற்றும் நீங்கள் விரும்பிய விஷயங்கள் என்னும் ஒரு அடுக்கையும், பின்னர் முன்னேற்றத்திற்கான விஷயங்கள் இடம்பெறும் இன்னொரு அடுக்கையும், பின்னர் உங்களுக்குப் பிடித்திருந்த விஷயங்கள் இடம்பெறும் ஒரு நிறைவு அடுக்கையும் ஒன்றிணைக்கிறது. இந்த அமைப்பை நீங்கள் மீண்டும் மீண்டும் செய்தால் சாண்ட்விச் பல அடுக்குகளுடன் மிகவும் உயரமாக இருக்கும்.

Sandwich Approach Blank
ஆக்கப்பூர்வமான  கருத்துக்கள்

முன்னேற்றம் அடைவதற்கான விஷயங்கள்

ஆக்கப்பூர்வமான  கருத்துக்கள்

ஒவ்வொரு அடுக்கும் எவ்வளவு "தடிமனாக" இருக்க வேண்டும்? அது பெரிதும் பேச்சாளரின் நிலை மற்றும் நம்பிக்கையைப் பொறுத்தது.

  • தொடக்க நிலையில் இருக்கும் பேச்சாளர்களுக்கு, 40% ஆக்கபூர்வமான விஷயங்கள், 20% முன்னேற்றம் அடைவதற்கான விஷயங்கள், 40% ஆக்கபூர்வமான விஷயங்களைத் தெரிவிப்பது சிறப்பு. மதிப்பீட்டில், முன்னேற்றம் அடைவதற்கான இரண்டு விஷயங்களை மட்டுமே நீங்கள் குறிப்பிடுவீர்கள் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது; இந்த விஷயங்களே முக்கியமானவை.
  • இருப்பினும், மிகவும் அனுபவம் வாய்ந்த பேச்சாளர்கள் முறையே 20% 50% 30% என்ற சதவீதத்தில் விஷயங்கள் தெரிவிக்கப்படுவதை விரும்புவார்கள், அதாவது முன்னேற்றத்திற்கு ஐந்து முதல் ஆறு விஷயங்களும், இரண்டு முதல் மூன்று வலுவான ஆக்கப்பூர்வமான விஷயங்கள் தெரிவிக்கப்பட வேண்டுமென்று விரும்புவார்கள்.

 

ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிப்பது

ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிப்பது பொதுவாக எளிதான பகுதியாகும். இருப்பினும், பல விஷயங்களில் நாம் எளிதாக தடுமாறி விடுவோம்:

  • பாராட்டுவது - பாராட்டுவது என்பது நிச்சயம் ஆக்கப்பூர்வமான விஷயமே, எல்லோரும் பாராட்டுக்கள் பெறுவதை விரும்புகிறார்கள், ஆனால் கருத்தை அல்ல. வித்தியாசம் என்னவென்றால், பாராட்டு என்பது குறிப்பிட்டு கூறாத விஷயம், பேச்சாளருக்கு எந்த விஷயம் அவருக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது என்பது தெரியாது, அவ்வாறு தெரிந்தால் அவர் அதை மீண்டும் செய்யலாம் அல்லது அதை மீண்டும் உருவாக்கலாம். உதாரணமாக, "கதை அருமையாக இருந்தது. உண்மையில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளீர்கள்!" - இது விஷயம் குறிப்பிடப்படாத ஒரு பாராட்டு. இருப்பினும், "கதை அருமையாக இருந்தது. அந்தச் சிறுமியின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அவளுடைய கதாபாத்திரத்தின் மிகவும் விளக்கமாகக் கூறப்பட்டிருந்தது, மேலும் உங்கள் குரலால் நீங்கள் அந்தக் கதாப்பாத்திரம் போலப் பேசிய விதம் சிறப்பாக இருந்தது" என்று நீங்கள் சொன்னால், அது ஆக்கப்பூர்வமான கருத்து. "குரல் நன்றாக இருந்தது", "சிறப்பான சொற்பொழிவு", "அருமையான விளக்கம்" என்று பொருள்படாத பொதுவான அடைமொழிகளைக் குறிப்பாகத் தவிர்த்திடுங்கள், அவற்றை ஏன் அவ்வாறு நினைத்தீர்கள் என்பதற்கான விளக்கத்தை நீங்கள் அடுத்த வரியில் கூறாவிட்டால்.

 

  • அற்பமான விஷயங்கள் - அற்பமான விஷயங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களைத் தெரிவிக்கும் அல்லது பாராட்டும் வலையில் சிக்காதீர்கள். அனுபவம் வாய்ந்த பேச்சாளர்களுக்கு மதிப்பீடு வழங்கும்போது இதன் மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும். தொடக்க நிலை பேச்சாளருக்கான மதிப்பீட்டில், அவர் குறிப்புகளைப் பயன்படுத்தவில்லை அல்லது அவர் நன்கு பார்வையாளர்களை பார்த்து பேசினார் என்று குறிப்பிட்டாலோ, அல்லது கருத்து தெரிவித்தாலோ பரவாயில்லை. இருப்பினும், அனுபவமிக்கப் பேச்சாளருக்கான மதிப்பீட்டில், இந்த விஷயங்கள் அற்பமானதாக மாறிவிடும். ஏற்கனவே 20+ செயல்திட்டங்களை வழங்கிய ஒருவரின் நிலையில் இருந்து பாருங்கள், 21 ஆம் முறையாகச் சொற்பொழிவாற்றுபவரிடம், "நீங்கள் குறிப்புகளைப் பயன்படுத்தவில்லை, அது மிகவும் சிறப்பான விஷயம் ...", என்று நீங்கள் கூறினால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

 

  • மிகவும் அதிகப்படியாக ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிப்பது -  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உறுப்பினர்கள் அனைவரும் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் விஷயங்களைக் கற்றுக் கொள்ளவுமே Agora -வில் இணைகிறார்கள். ஒரு மதிப்பீட்டில் 80% (அல்லது அதைவிட மோசமாக, 100%) ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தால், "சரி, நான் மிகவும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றுகிறேன் என்றால், நான் முதலில் இங்கு என்ன செய்கிறேன்?", என்று அந்த உறுப்பினர் யோசிப்பார்.

 

  • தெளிவில்லாமல், கலவையாக தெரிவிக்கப்படும் ஆக்கப்பூர்வமான கருத்து -  மக்கள் பெரும்பாலும் தெளிவில்லாமல், கலவையாக, குழப்பமான முறையில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைத் தெரிவிப்பர். "எனக்கு.... பிடித்தது, ஆனால்...." என்று பலர் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இதில் "ஆனால்" என்ற வார்த்தை அதற்கு முன்னால் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் அழித்துவிடும். மேலும் முன்னிருக்கும் விஷயங்கள் அதன் பின் வரும் உண்மையான கூற்றுக்குப் பொருத்தமற்ற அறிமுகமாக இருக்கும். இத்தகைய சொற்றொடரை தவிர்க்கவும். ஆக்கப்பூர்வமான கருத்துக்களைத் தனியாகத் தெரிவிக்க வேண்டும்.

 

முன்னேற்றம் அடைவதற்கான கருத்துக்களை தெரிவிப்பது

பொதுவாக, இந்தப் பகுதியை தெரிவிப்பதுதான் மிகவும் கஷ்டமான காரியம். இந்தச் சிரமத்திற்கான காரணங்கள் பின்வருமாறு:

  • நாம் விமர்சிக்க விரும்பமாட்டோம்
  • நமது சொந்த அனுபவம் குறித்து நமக்கு தயக்கம் இருக்கும்
  • நமது தகுதிகள் குறித்து நமக்கு தயக்கம் இருக்கும்
  • நாம் சரியாகக் கேட்டோமா அல்லது பார்த்தோமா என்பது குறித்து நமக்கு தயக்கம் இருக்கும்

இவற்றை நிவர்த்திச் செய்ய, நீங்கள் பேச்சாளருக்கு மதிப்பெண் அளிக்கவில்லை என்றும், உங்கள் சொந்த கருத்தை தெரியப்படுத்துவதோடு, எவ்வாறு சொற்பொழிவை மேம்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளையும் அவருக்கு வழங்குகிறீர்கள் என்றும் நினைவில் கொள்ளுங்கள்.

முன்னேற்றம் அடைவதற்கான விஷயங்கள் என்று நீங்கள் தெரிவிப்பவை பயனுள்ளதாக இருக்க, அவை:

  • விஷயத்தைக் குறிப்பிட்டுக் கூறும் விதத்தில் இருக்க வேண்டும்: மீண்டும், இதுதான் விமர்சனத்தைக் கருத்து தெரிவிப்பதிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. பாராட்டுத் தெரிவிப்பது போல விமர்சனங்களும் விஷயத்தைக் குறிப்பிட்டு கூறாதவையே, மேலும் பல முறை இது தனிநபர் சார்ந்த விஷயம். "உங்கள் உடல் பாவனைச் சற்றுக் கூடுதலாக இருந்தது" என்று கூறுவது விமர்சனத்திற்கான ஒரு உதாரணம். இருப்பினும், அதற்குப் பதிலாக, "நீங்கள் மேஜையில் குதித்துக் கொரில்லாவைப் போல நடிக்க ஆரம்பித்து, பின்பு நீங்கள் விளக்கில் தொங்கியதை பார்த்த போது, உங்கள் உடல் பாவனைச் சற்றுக் கூடுதலாக இருந்ததாக நான் எண்ணினேன்.", என்று குறிப்பிட்டு கூறுவது கருத்தாகும்.
  • வழிகாட்டும் விதமாக இருக்க வேண்டும்: இதன் பொருள், ஒருவர் நிகழ்த்தியதில் எந்தப் பகுதிகளை மேம்படுத்தலாம் என்பதை நீங்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், அவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதையும் நீங்கள் அறிவுறுத்துகிறீர்கள். முந்தைய உதாரணத்தைத் தொடர்ந்து, நீங்கள் பின்வருவனவற்றைச் சேர்க்கலாம், "கொரில்லாக்கள் செய்வது போல உங்கள் கைகளை வைத்து உங்கள் உடலை வளைத்து, சில அடிகள் நடப்பது போதுமானதாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்".
     
  • செயல்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்: இதன் பொருள், நீங்கள் விரும்பாத விஷயத்தை மாற்றிக் கொள்வதற்கு அந்த நபர் உண்மையில் ஏதாவது செய்யக்கூடிய வகையில் உங்கள் கருத்தானது அமைய வேண்டும். உதாரணமாக, அந்த நபருக்கு முரட்டுக் குரல் இருந்தால், அது அவருக்கு இருக்கும் இயல்பான குரல். அவரிடம், "நீங்கள் ரொமான்ட்டிக் கவிதைகளைப் படிக்கும்போது, மென்மையான, மெல்லிசை போன்ற, வித்தியாசமான குரலை பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.", என்று கூறுவது ஆக்கப்பூர்வமான கருத்தல்ல·

முன்னேற்றம் அடைவதற்கான விஷயங்களைத் தெரிவிக்கும்போது:

  • பரிந்துரைகளை மீண்டும் சொல்லாதீர்கள்: நீங்கள் அவற்றை ஒரு முறை சுட்டிக்காட்டினால் போதும், மீண்டும் மீண்டும் அதையே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
  • கட்டளை வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்: நீங்கள் பேச்சாளரின் முதலாளி அல்ல. "நீங்கள் செய்ய வேண்டும்", "உங்களுக்குத் தேவை" (அல்லது, "நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும்") அல்லது பொதுவாக, "சுட்டிக்காட்டும்" வாக்கியங்களைத் தவிர்க்க முயற்சிக்கவும். "நான் இதைச் செய்வேன், அதற்குப் பதிலாக அதைச் செய்வேன்", "இதை நீங்கள் இந்த வழியில் செய்யுமாறு பரிந்துரைக்கிறேன்", "நான் உங்களுக்குப் பரிந்துரைப்பதாவது...", "நான் வழங்கும் கருத்தாவது..." போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
  • முழுமையாய் பேசாதீர்கள்: நீங்கள் உங்கள் கருத்தை மட்டுமே  தெரிவிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், உலகளாவிய உண்மையை அல்ல. "குரல் வித்தியாசம் இல்லை", என்று கூறுவதற்கு பதிலாக, "நான் அதிக குரல் வித்தியாசத்தை கவனிக்கவில்லை - நீங்கள் சிறுமி, ஓநாய் மற்றும் பாட்டி போல் உருவகப்படுத்திக் காட்டிய மூன்று நிகழ்வுகளை மட்டுமே நினைவில் வைத்திருக்கிறேன்" என்று கூறலாம்.
  • மற்றவர்கள் தெரிவிப்பது போல பேசாதீர்கள்: மீண்டும், இது முந்தைய விஷயங்களுடனேயே தொடர்புடையதாக இருக்கிறது. பேச்சாளருக்கோ அல்லது பார்வையாளர்களுக்கோ நீங்கள் எதையும் நிரூபிக்க தேவையில்லை. உதாரணமாக: "உடல் பாவனையை மேம்படுத்த முடியும் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன்".
  • இறுதியாக, அடிப்படை காரணங்களை வைத்து அனுமானம் செய்வதற்குப் பதிலாக நீங்கள் கவனித்த விஷயங்களைத் தெரிவியுங்கள். உதாரணமாக, "சொற்பொழிவுக்காகச் சரியாகத் தயார் செய்யவில்லை என்று நான் உணர்ந்தேன்" என்று கூறாதீர்கள், ஏனெனில் இந்த அனுமானத்திற்கு உங்களிடம் எந்த அடிப்படையும் இல்லை. அதற்குப் பதிலாக, "சில தருணங்களில் அடுத்து என்ன சொல்வது என்று சரியாகத் தெரியாமல் தங்கியதாக நான் உணர்ந்தேன்.", என்று நீங்கள் உண்மையில் உணர்ந்ததைத் தெரிவிக்கலாம்.

 

மதிப்பீட்டு சொற்பொழிவின் நிறைவு

மதிப்பீட்டு சொற்பொழிவின் நிறைவில் ஆக்கப்பூர்வமான விஷயங்கள், முன்னேற்றம் அடைவதற்கான விஷயங்கள் ஆகியவற்றை மீண்டும் சுருக்கமாகத் தெரிவித்து, இன்னும் ஊக்கமளிக்கும் மற்றும் உற்சாகமளிக்கும் சிறப்பான குறிப்புடன் நிறைவு செய்ய வேண்டும்.

அதிகம் பயன்படுத்தியதால் பொருளிழந்து போன வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள், குறிப்பாக, "உங்கள் அடுத்த உரையை எதிர்பார்க்கிறேன்" என்பன போன்ற வழக்கமான வாக்கியங்களைக் கூறுவதைத் தவிர்க்கவும். ஆக்கப்பூர்வமானவற்றைக் கூற முயற்சி செய்யுங்கள். சொற்பொழிவுக்கு முன்பே நிறைவில் குறிப்பிடுவது பற்றித் திட்டமிடுங்கள்.

 

ஒரு மதிப்பீட்டாளராகச் செய்ய வேண்டிய விஷயங்கள் - சந்திப்பிற்கு பின்பு

சந்திப்பிற்குப் பிறகு, நீங்கள் மதிப்பீடு செய்த நபரிடம் சென்று ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருக்கிறதா என்று பேசுங்கள்.

மேலும், அந்தச் செயல்திட்டத்திற்கான அவரது மதிப்பீட்டு அட்டையை நிரப்ப நினைவில் கொள்ளுங்கள்.

 

சிறந்த மதிப்பீட்டாளராக ஆவது

எல்லாவற்றையும் போல, முழுமை என்பது பயிற்சி செய்வதன் மூலம் வருகிறது. ஆனால் அத்தகைய நடைமுறை பயிற்சியைப் பெற நீங்கள் ஒரு மதிப்பீட்டாளராக இருக்க வேண்டிய தேவையில்லை. எடுத்துக்காட்டாக, பகிரங்கமாகச் செய்யாமல், ஒரு மதிப்பீட்டாளர் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் நீங்கள் செய்யலாம். மேலும் உங்கள் மதிப்பீட்டை சந்திப்பிற்கு நியமிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் வழங்கிய மதிப்பீட்டோடு ஒப்பிட்டுப் பார்க்குமாறு எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

 

உங்களை மதிப்பீடு செய்யும்போது

உங்களை மதிப்பீடு செய்யும்போது, மதிப்பீட்டை தாழ்மையுடனும், பரிசாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை மேம்படுத்துவதற்கே மதிப்பீட்டாளர் இருக்கிறார். எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாதீர்.

மதிப்பீட்டாளருடன் விவாதம் செய்யாதீர், குறிப்பாக மதிப்பீட்டுச் சொற்பொழிவின்போது. அவர் தனது கருத்தை மட்டுமே தெரிவிக்கிறார், நீங்கள் நிகழ்த்தியதை அவர் பார்த்த மற்றும் உணர்ந்த விதத்தை உங்களுக்கு விவரிக்கிறார்.

நீங்கள் ஏதேனும் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அல்லது அவருடன் ஏதாவது விவாதம் செய்ய விரும்பினால், சந்திப்பிற்குப் பிறகு அதைச் செய்யுங்கள்.

 

எப்போது மதிப்பீட்டாளராக இருக்கக்கூடாது

உங்கள் கிளப்பில் சிறப்பான, பாராட்டைப்பெற்ற மதிப்பீட்டாளராக நீங்கள் மாறியதும், உங்கள் திறமைகளை வேறு இடங்களில் பயன்படுத்த ஆசைப்படுவீர்கள். இருப்பினும் அதை எச்சரிக்கையுடன் மேற்கொள்ளுங்கள். ஒரு கிளப்பிற்கு வரும் பேச்சாளர்கள் தங்கள் சொற்பொழிவுகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும், அது குறித்த கருத்துக்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் வருகிறார்கள்; அவர்கள் அதை எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் அதை மதிக்கிறார்கள். ஆனால் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொது மக்களுக்கு அல்லது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பேச்சாளர்களுக்கு இது பொருந்தாது.

விருது வழங்கும் ஒரு விழாவில் கலந்துகொள்வது குறித்துக் கற்பனை செய்து பாருங்கள், விழா நிறைவடைந்ததும் வெற்றியாளரை அணுகி, "உங்களது சொற்பொழிவு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. எல்லோருக்கும் கேட்கின்ற வகையில் அரங்கின் பின்பக்கம் வரை கேட்கிறவாறு நீங்கள் பேசியது எனக்கு மிகவும் பிடித்தது. நீங்கள் பார்வையாளர்களைப் பார்த்து பேசுவதை இன்னும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் பரிந்துரைக்கலாமா? நீங்கள் அரங்கின் வலது சாரி பக்கம் அதிகமாகப் பார்க்க முனைவதை நான் கவனித்தேன், மேலும் ... ", என்று தெரிவித்துப் பாருங்கள்.

அது எவ்வளவு விசித்திரமாக இருக்கும், அவ்வாறு நடந்திருக்கிறது.

ஒரு ஆசிரியராக இருந்து கருத்து தெரிவிப்பதற்கும், பெருந்திரளான மக்கள் கூட்டத்திற்கு சொற்பொழிவாற்றுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

 

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:00:00 CET by agora.